Saturday, June 8, 2019

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர் சந்திப்பு




எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூன்,08) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி, நெல்லை மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எ.கனி, மாவட்ட பொதுச்செயலாளர் பீர் மஸ்தான், மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா, பர்கீட் அலாவுதீன் மருத்துவ சேவை அணி பொருளாளர் முபாரக் அலி, எஸ்.டி.டி.யு. மாவட்ட செயலாளர் பஷீர் லால், மாவட்ட துனைத் தலைவர் கல்வத், வர்த்தகர் அணி புகாரி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பின்வரும் விஷயங்களை குறிப்பிட்டார்.   

அழிவுத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்:

தமிழகத்தை அழிவுத்திட்டங்களின் சோதனைக்கூடமாக மோடி அரசு மாற்றிவருகின்றது. தமிழக விவசாயத்தை குறிவைத்து குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளை குறிவைத்து மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தி வருகின்றது.

விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசம் செய்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை காவல்துறை அடக்குமுறையுடன் கெயில் நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது. அதேபோல் தேனி பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ திட்டத்தையும், கூடங்குளத்தில் அணு உலைப் பூங்காக்களையும், தற்போது ஆபத்தான அணுக்கழிவை சேர்த்து வைக்கும் மையத்தையும் அமைக்கும் நடவடிக்கைகளை சர்வாதிகார போக்கில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவருகின்றது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் அனுமதி அளித்து, மாநில மக்களின் நலனை நசுக்கி வருகின்றது.

வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். இது தொடர்பாக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


கூடங்குளத்தில் ஆபத்து நிறைந்த அணுக்கழிவு மையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்:

கூடங்குளம் அணு உலை கழிவுகளை கையாளுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளுக்கு மாறாக, ஆழ்நிலை கருவூலத்தை (Deep Geological Repository) அமைக்காமல், கூடங்குளம் அணுஉலை வளாகத்துக்குள்ளாகவே (Away From Reactor) அணுக்கழிவு கருவூலத்தை அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அணுஉலைக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்று கடந்த ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக தேசிய அணுமின் கழகம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஆபத்தான நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அணு உலையே ஆபத்தானது அதனால் அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என கூடங்குளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராடிவரும் நிலையில், அதனை விட பல ஆயிரம் மடங்கு ஆபத்து நிறைந்த, செறிவூட்டப்பட்ட அணுக்கழிவை கையாளும் எவ்வித தொழில்நுட்பமும் இந்தியாவிடம் இல்லாத நிலையில், அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவினை தற்காலிகமாக சேர்த்துவைக்கும் மையத்தை அமைக்கவிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தை அழிவு திட்டங்களின் சோதனைக்கூடமாக்கிவரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் "ஆழ்நிலை கருவூலம்" (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் Away From Reactor  போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் அணு உலைகள் மூலம் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

அணுக்கழிவு மையத்தை கர்நாடகா மாநிலம் கோலார் சுரங்கத்தில் அமைக்கவிருப்பதாக இந்திய அணுசக்திக்கழகம் தெரிவித்தபோது, அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இரண்டு நாட்களில் அந்த முயற்சியை மத்திய அரசு கைவிட்டது. அப்போது மாநிலத்தை ஆண்ட பாஜக அரசு கர்நாடகாவில் அணு திட்டங்களுக்கு எங்கும் அனுமதி கிடையாது என தெரிவித்தது. ஆனால் தமிழகத்தில் பெரும் மக்கள் எதிர்ப்பு வந்தபோதிலும் ஆளும் அரசுகள் சர்வாதிகாரப் போக்கில் அதனை கண்டுகொள்ளாது தொடர் அழிவுத்திட்டங்களை திணிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. மக்கள் கோரிக்கைகளை ஏற்பதில் கூட மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து போராடினால் மட்டுமே தமிழகத்தை அழிவிலிருந்து காக்க முடியும்.

ஆகவே, கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தரம் குறைந்த 2 அணு உலைகளின் செயல்பாட்டை நிறுத்துவதோடு, மேலும் நான்கு அணு உலைகளை அங்கு நிறுவ மேற்கொண்டிருக்கும் முயற்சி மற்றும் ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை புதைக்க எடுக்கும் திட்டத்தையும் உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் பகுதி மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கு எதிராக தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதிய தேசிய கல்விக் கொள்கை – கருத்து தெரிவிக்க 6 மாத கால அவகாசம் தேவை:

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த குழு அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க பரிந்துரை செய்தது. இதற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்புகள் வெளியானதை அடுத்து இந்தியை கட்டாயமாக திணிக்கும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், கஸ்தூரி ரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மும்மொழி கொள்கையை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளன. குழு பரிந்துரைத்துள்ள இடைநிலை பருவக் கல்வியில் அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரையில் சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றை கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இருமொழி கொள்கைக்கு எதிரான மும்மொழி கொள்கை திணிப்பாகும். மேலும், இதுபோன்ற சர்ச்சைகள் வேறு என்ன உள்ளன என்பதை வரைவு அறிக்கையை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்னர் தான் தெரியவரும்.

அதோடு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை தொடர்பான கருத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம் தவிர்த்த வேறு இந்திய மொழிகளில் முழுமையாக வரைவு அறிக்கையை வெளியிடாமல் அவசர அவசரமாக கருத்துக்கேட்புகளை நடத்தி முடிப்பதன் நோக்கம் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஆகவே அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிடுவதோடு குறைந்தபட்சம் 6 மாத அவகாசத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்த முந்தைய வரைவு அறிக்கையில், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான பரிந்துரைகளும், குலத்தொழில், கல்வியை காவி மயமாக்குவது, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மாநில உரிமைகளை முற்றிலுமாக நீக்குவது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதுபோன்ற மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த புதிய வரைவு அறிக்கையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே, அதனையெல்லாம் கருத்தில்கொண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை முழுவதுமாக படித்து ஆய்வு செய்து அதுதொடர்பாக கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 6 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்துகின்றோம்.


நீட் தேர்வு - தொடரும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்:


நீட் தேர்வால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஸ்ருதி போன்ற மாணவிகளை தமிழகம் கடந்த ஆண்டுகளில் இழந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவு ரிதுஸ்ரீ, மோனிஷா, வைசியா ஆகிய மூன்று மாணவிகளின் உயிர்களை பறித்திருக்கிறது.

ஆண்டுதோறும் நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகும்போது, நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை இதுவரை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவில்லை. மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்காமல் தமிழக மாணவர்களின் உயிரிழப்புகளை தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம்தாழ்த்தி வருகின்றது. தமிழக அரசின் மெத்தனம் இன்னும் எத்தனை உயிர்களை காவுகொள்ளப் போகின்றதோ?

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு பெற்றிருந்தால் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. ஏழை, எளிய, நடுத்தர, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகள் இந்த நீட் தேர்வினால் அழிக்கப்படுகிறது.

ப்ளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்வி சேர்க்கை நடைபெற்றிருந்தால் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட மாணவிகள் நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்று தங்களது மருத்துவர் கனவை அடைந்திருப்பர். ஆனால், மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக ஏற்பட்ட தோல்வி காரணமாக விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இது மத்திய, மாநில அரசுகளின் நீட் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட இழப்பாகும். மத்திய, மாநில அரசுகளே இதற்கு பொறுப்பெற்க வேண்டும்.


மருத்துவ சேர்க்கையில் முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டாலும், நீட் தேர்வினை ஆய்வுக்கு உட்படுத்தினால் அது சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது. நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்களின், ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து உயர் வகுப்பு மாணவர்கள் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதை காணமுடிகிறது.


கல்வியில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் விளங்கும் தமிழகம் நீட் தேர்வில் 23வது இடத்தில் உள்ளது.

அதோடு நீட் தேர்வுக்கு என்று தனியாக சில லட்சங்கள் ரூபாய் செலவு செய்து ‘கோச்சிங்’ சென்றால் தான் அதனை எதிர்கொண்டு ஓரளவு வெற்றிபெற முடியும் என்பது தேர்வு முடிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாறாக அரசு நடத்தும் பெயரளவிலான கோச்சிங் சென்டர்களால் எந்த பலனையும் அரசுப் பள்ளி மாணவர்கள் அடையவில்லை என்பதையும் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதன் விபரீதத்தை புரிந்துகொள்ளாத தமிழக அரசு கடந்த ஆண்டை விட நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக வீண் பெருமை பேசுகிறது.


பள்ளிக் கல்வியில் ஏழை-எளிய மாணவர்கள் சாதனை வெற்றி அடைந்தாலும், அவர்கள் லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதன் மூலமே மருத்துக் கல்வியை கற்க முடியும் என்பது ஒருவித கல்வித் தீண்டாமையாகும். மருத்துவத்துறையானது சேவை துறையிலிருந்து வணிக துறையாக மாறிப்போகும் சூழலை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது.



ஆகவே, ஏழை-எளிய மாணவர்களை கருத்தில் கொண்டும், நீட்டால் பாழாகப்போகும் மேம்பட்ட தமிழக சுகாதாரத்தின் நிலையையும் கவனத்தில் கொண்டு, நீட் விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை:

தமிழகத்தின் முக்கிய நீராதார பருவமழை காலமான, வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போன காரணத்தால் தமிழகம் முழுவதும் நீராதாரங்கள் விரைவில் வறண்டுவிட்டன. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. வற்றாத ஜீவநதி என பெயர் பெற்ற தாமிரபரணி நதியின் நீர் பிடிப்பு பகுதியான பாபநாசம், சேர்வலாறு அணைகள் வறண்டுவிட்டன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, கடும் குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அன்றாட வேலைகளை மேற்கொள்ள முடியாமல் காலி குடங்களுடன் தண்ணீருக்கு அலைவதே முழு வேலையாகிவிட்டது. கழிவறை பயன்பாட்டுக்கும், குளிக்கவும் தண்ணீர் இல்லை. குடிக்க சுத்தமான நீரில்லை என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொல்லொண்ணா துன்பங்களுக்கு மக்கள் ஆளாகிவருகின்றனர்.

தலைநகர் சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் இன்னும் மோசமாகத் தான் இருக்கிறது. பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமப்புற மக்களும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து மக்கள் தள்ளு வண்டியில் தண்ணீருக்காக அலைந்து திரிவதை காண முடிகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் குடிநீருக்காக மக்கள் பரிதவிப்பதை காண முடிகிறது.

ஆகவே, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல தனியார் நிறுவனங்கள் குடிநீர் பாட்டில் விலைகளை கடுமையாக உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு இத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.


சந்தேகத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்:

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், சுமார் 370 தொகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கை முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன. இது சம்மந்தமான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை முறையான விளக்கமளிக்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து தேர்தல் முடிவு விவரங்களை நீக்கியுள்ளது ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முரண்பாடு மற்றும் ஆணையத்தின் செயல்பாடுகள் மூலம் தேர்தல் ஆணையம் மக்களின் சந்தேகப்பார்வைக்கு உள்ளாகியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆணையத்தின் முழு செயல்பாடுகளும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களில், ஆணையத்தின் செயல்பாடுகளில் எவ்வித மோசடியும் இல்லை எனில், மக்கள் மனங்களில் தோன்றியுள்ள சந்தேகங்களைப் போக்கி தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட ஆணையம் முன்வரவேண்டும்.

நாட்டிலுள்ள எதிர்கட்சிகள் இத்தகைய அசாதாரண நிலையை ஒன்றுபட்டு கடுமையாக எதிர்த்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த செயலைக் கண்டித்துப் போராட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment