Friday, July 12, 2019

அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிற்சி பட்டறை





நெல்லை அரசு அருங்காட்சியகமும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியும் இணைந்து முதலாமாண்டு சித்த மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓலைச்சுவடி பாதுகாப்பு 2 நாள் பயிற்சி பட்டறை நடத்தினர் .
முதல் நாள் பயிற்சி 11/ 7 /2019  அன்று அரசு சித்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேராசிரியர் மருத்துவர் பா. மலர்விழி, துறைத் தலைவர் அவர்கள் வரவேற்புரை நல்கினார். துணை முதல்வர் பேராசிரியர். மருத்துவர். திருத்தணி அவர்கள் தலைமை ஏற்று நிகழ்வினை நடத்தினார். முதலாம் அமர்வாக சுவடியும் கணினியும் என்கிற தலைப்பில் இரா. ஸ்பர்ஜன் ரத்தீஷ் உதவிப் பேராசிரியர் , சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சிறப்புரை ஆற்றினார். மதியம் இரண்டாம் அமர்வாக ஓலைச்சுவடி பாதுகாப்பு என்கிற தலைப்பில் காப்பாட்சியர்
 சிவ. சத்திய வள்ளி ஓலைச்சுவடி பாதுகாப்பில் பின்பற்றப்படும் முறைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் நாள் பயிற்சி இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அதில் சுவடியியல் பற்றிய  வே. கட்டளை கைலாசம், மேனாள் தமிழ்த்துறை தலைவர் மதிதா இந்து கல்லூரி அவர்களால் சிறப்புரை  வழங்கப்பட்டது.  அந்த அமர்வில் ஓலைச்சுவடிகளின் தோற்றங்கள் பற்றியும் வரலாறு பற்றியும் விளக்கமாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது இரண்டாம் அமர்வு சுவடிகள் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கத்தினை காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார் அருங்காட்சியகத்தில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில்" மேலும்"சிவசு அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளர் மருத்துவர் வேதகிரி சுப்பையா நன்றியுரை தெரிவித்தார். இப் பயிற்சி பட்டறையை நடத்திய நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ சத்திய வள்ளி  இப்பயிற்சி பற்றி தெரிவிக்கையில் இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்திற்கு ஓலைச்சுவடிகள் அதிகமாக உள்ளன. திருநெல்வேலியில் மிகவும் அதிக அளவில் ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவத்தின் சித்த மருத்துவத்தில் பல அரிய கருத்துக்களை நமது முன்னோர் ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர் அந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. தஞ்சை தமிழ் பல்கலைகழகம் பல்வேறு நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அவற்றை பாதுகாத்து வருகின்றன . அதையும் தாண்டி தனிநபர்களின்  வசம் பல ஓலைச் சுவடிகள் மருத்துவ குறிப்புகள் பயனற்ற நிலையில் உள்ளன .அவற்றை மின்னணு முறையில் பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் செய்துவருகின்றன. தென் தமிழகப் பகுதியில் கிடைத்த ஓலைச்சுவடிகள் அதிக அளவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள ஓலைச்சுவடிகளை , அந்த சுவடியில் உள்ள தகவல்களை அறியும் பொருட்டு அச்சுவடுகளை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தால் சுவடிகளில் உள்ள அரிய தகவல்களை மின்னணு முறையில் மாற்றி பாதுகாத்து அந்த சுவடிகளை தங்கள் வசமே திரும்ப ஒப்படைக்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment